மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருடன் சந்திப்பு



எழுத்தாளர் எஸ். செந்தில்குமார் போடியைசொந்த ஊராக கொண்டவர். 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி வருபவர். இதுவரை ஆறு நாவல்கள் ஏழு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள், சில தொகை நூல்கள் என தீவிரமாக இயங்கிவருபவர். ஆனாலும் அறியப்படாத எழுத்தாளர் என்றே சொல்ல வேண்டும். அவருடைய அண்மைய நாவல் 'கழுதைப் பாதை' சில ஆண்டுகள் உழைத்து உருவாக்கப்பட்ட படைப்பு. 1948-67 வரையிலான காலத்தில் நாவல் நிகழ்வதாக செந்தில்குமார் கூறினார். இதுவரையிலான மரபாச்சி எழுத்தாளர் சந்திப்புகள் ஒரு எழுத்தாளரின் அதுவரையிலான எல்லா படைப்புகளுக்கு உரியதாகவே இருந்துள்ளன. ஒரேயொரு படைப்பிற்கு கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. 

நேற்று (1-3-20) இந்த நாவலுக்காக ஒரு கலந்துரையாடல் மற்றும் வாசிப்பு அரங்கை காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பாக காவேரி மருத்துவமனையில் ஒருங்கிணைத்தோம். எஸ். செந்தில்குமார் மதியம் ஒன்றரை மணிக்கு வந்து சேர்ந்தார். உணவு உண்டு சிறிது ஓய்வெடுத்த பின்னர் மூன்றரை மணிக்கு நிகழ்வுக்கு வந்து சேர்ந்தோம். நேற்றைய கூடுகையில் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள். இக்கூடுகைக்காக ஐந்து நாவல் பிரதிகளை முன்னரே செந்தில் அனுப்பி இருந்தார். அதைத்தவிர என்னிடமும் துரை அறிவழகனிடமும் இரண்டு பிரதிகள் இருந்தன. கலந்து கொண்ட பதினாறு பேரில், டாக்டர் சலீம், டாக்டர், அறிவழகன், டாக்டர். ரவி, கபூர், ராஜா முகமது, கோமளா, கிருஷ்ணவேணி தவிர நானும் துரை அறிவழகனும் நாவலை வாசித்திருந்தோம். செல்லபாண்டி, கன்னேஸ்வரி மற்றும் பிரபா முழுமையாக வசித்து முடிக்கவில்லை என்றாலும் ஓரளவு வாசித்திருந்தார்கள். 
நாவல் குறித்து ஒவ்வொருவரும் தங்கள் வாசிப்புகளை அளித்தார்கள். அதையொட்டி கேள்விகளும் விவாதங்களும் நிகழ்ந்தன. செந்தில்குமார் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பதில் அளித்தார். நாவல் உருக்கொண்ட விதத்தை பற்றியும் பொதுவாக தமிழ் இலக்கிய சூழலை பற்றியும் அவர் கூறிய தகவல்கள் முக்கியமானவை. டாக்டர் ரவி பேசுகையில் ஒரு நம்பகமான உலகை சித்தரித்து அதனுள் வாசகனை வாழ வைத்தது மிக முக்கியமான அனுபவம் என்றார். கபூர் கழுதைகளின் இறப்பு சார்ந்து பேசும்போது அவற்றுக்கும் மூவன்னாவிற்கும் இடையிலான பிணைப்பு நாவலில் உருக்கொள்ளவில்லை என ஒரு பார்வையை வைத்தார், அதை கிருஷ்ணவேணி மூவண்ணாவின் பாத்திர வார்ப்பு வழியாக நியாயம் செய்யப்பட்டதாக கூறினார். கதை மாந்தர்களின் குற்ற உணர்வும் சாபங்களும் தான் கதையை இயக்குகின்றன என கோமளா கூறினார். தொழிலாளர் முதலாளி உறவு பற்றி ராஜா முகமதும் டாக்டர். அறிவழகனும் சில பார்வைகளை முன்வைத்தார்கள். துரை அறிவழகன், நாவலின் தொடக்கத்தில் கழுதைகள் பற்றி உள்ள நுணுக்கமான விவரணைகள்  லேசாக விலக்கம் அளிப்பதாக கூறினார். 

நாவல் குறித்தான உரையாடல் நிறைவாக முடிந்த பிறகு சுமார் அரைமணிநேரம் பொதுவான உரையாடல் நிகழ்ந்தது. தஞ்சை எழுத்தாளர்கள் மீது குறிப்பாக தி.ஜாவின் மோக முள் மீது தனக்கு பெரிய மதிப்பு இல்லை என்றார். இது சார்ந்து கவியரசு நேசனுடன் சுவாரசியமான உரையாடல் நிகழ்ந்தது. செந்தில்குமார் தீவிரமாக தனது விமர்சன தரப்புகளை முன்வைப்பதில் தயங்கவில்லை. 












இறுதியாக புத்தகங்களில் கையெழுத்துப் பெற்று புகைப்படம் எடுத்து நிகழ்வை முடித்துக்கொண்டோம். ஆறரை மணிக்கு மதுரை பேருந்தில் புறப்பட்டு சென்றார். 

கழுதைப் பாதை இதுவரை ஆவணப்படுத்தப் படாத வரலாறை களமாக கொண்டது. வெறும் ஆவணங்களாக இல்லாமல் கலைத்தன்மையுடன் படைத்திருக்கிறார். சமீப காலங்களில் வெளிவந்த குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று என துணிந்து சொல்லலாம். எஸ். செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள். 

Comments

Popular posts from this blog

மரப்பாச்சி இலக்கியவட்டம் கூடுகை 21

கார்த்திகை பாண்டியன் சந்திப்பு