கார்த்திகை பாண்டியன் சந்திப்பு


எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் காரைக்குடி மரப்பாச்சி சந்திப்பிற்காக கோவையிலிருந்து ஜனவரி26 காலை காரைக்குடி வந்து சேர்ந்தார். மெய்யப்பா விடுதியில் காலை ஓய்வுக்கு பிறகு கவியரசு நேசனும் நானும் அவருடன் சேர்ந்து கொண்டோம். காலையுணவு முடித்து மூவருமாக அரியக்குடி கோவிலுக்கு சென்றோம். கானாடுகாத்தான் வழியாக திருமயம் சென்றோம். திருமயம் கோவில் நடை மூடியிருந்தது. மொத்த பயணமும் சுவாரசியமான உரையாடல்களால் நிரம்பியிருந்தது. மொழிபெயர்ப்பு விமர்சனம் வாசிப்பு சூழல் குறித்து பலவிஷயங்களை பகிர்ந்தார். மதிய உணவிற்கு பின் மாலை கூடுகை தொடங்கியது. மொத்தம் பதினாறு பேர் பங்கு கொண்டார்கள். 






பிரபாகரன் ஏன் அபத்தத்தை எழுத வேண்டும் எனும் கேள்வியுடன் விவாதம் தொடங்கியது. வாசகருக்கு ஒரு நிலைகுலைவை அமைதியின்மையை ஏற்படுத்தினால் என் கதைகள் வெற்றிபெற்றவை என்றார் காபா. அந்த தரிசனத்தை மரணத்தின் மீதான அச்சத்தின் வழியாகவும் பாலியல் சிக்கல்கள் வழியாகவும் அடைந்ததாக குறிப்பிட்டார். எனது ஆக்கங்கள் எல்லோருக்குமானவை அல்ல. அது வெகு சிலரை சென்று தொட்டால் போதும். அதுவே என் எதிர்பார்ப்பு என்றார். டாக்டர். ரவி கேட்ட கேள்வியும் முக்கியமாக பட்டது. இருத்தலியல் என்பது ஒரு காலகட்டத்தின் சிக்கலாக இருந்ததாக சொல்லப்படும் பார்வையை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார். இருத்தலியல் கேள்வி எப்போதும் உள்ளது. இப்போது அதன் வடிவம் மாறியுள்ளது என்றார். மொழியாக்க தேர்வுகள், நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. முகமது கபூரின் அவதானிப்புகள் காபாவின் கதைகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானவை எனும் பார்வையை கொண்டிருந்தது. மேலும் மேலும் இருளுக்குள் செல்வதாக பட்டதே தத்துவத்தின் துணை கொண்டு ஒளி நோக்கி செல்லக் கூடாதா என கேட்டார் டாக்டர் அறிவழகன். ஒளி என ஒன்றிருப்பதாக நான் நம்பவில்லை என்றார்  காபா. செல்லப்பாண்டி, கோமளா, டாக்டர்.சலீம், வினைத்தீர்த்தன் அய்யா ஆகியோரும் விவாதத்தில் பங்குபெற்றார்கள். 

ஆறு மணிக்கு நிகழ்வு முடிவுக்கு வந்தது. வீட்டில் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு பேருந்தில் ஏறினார்.  

Comments

Popular posts from this blog

மரப்பாச்சி இலக்கியவட்டம் கூடுகை 21

மரப்பாச்சி கூடுகை எண் 22 - எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாருடன் சந்திப்பு